Wednesday, 19 October 2016

 சக்கரங்கள்

மூலாதாரம்


அமைப்பு : இது நான்கு இதழ்கள் கொண்ட சிவப்பு நிறத்தாமரை ஆகும். கறுப்பு நிறலிங்கத்தை மூன்றரைச் சுற்றுக்கள் சுற்றப்பட்ட 
பொன்னிறக் குண்டலினி சர்ப்பத்தை மையத்தில் கொண்டது. இச்சக்கரத்தில் இருந்து நான்கு முக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன. 
அவை தாமரையின் நான்கு இதழ்கள் போல் தோற்றமளிக்கும். ஒவ்வொரு நாடியின் அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "வ ஸ ச ஷ" என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. 

இடம் : மூலாதாரச் சக்கரமானது பிறப்பு உறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. அது இடை, பிங்கலை,
 சுழுமுனை என்கிற மூன்று நாடிகள் சேரும் இடத்தில் உள்ளது. இன்னும் துல்லியமாக சொல்வதானால் ஆசனத்திற்கு இரண்டு விரற்கிடை 
 மேலும், பிறப்பு உறுப்புக்கு இரு விரற்கிடை கீழும் உள்ள நான்கு விரற்கிடை அளவுள்ள இடத்திலேயே மூலாதார சக்கரம் இருக்கின்றது.

மூலக்கூறு : பூமி

ஆண் தெய்வம் : பிரம்மா, இவர் படைப்பவர், கோதுமை நிற மேனியுடன் மஞ்சள் நிற வேட்டியும், பச்சை நிற துண்டும் அணிந்து நான்கு தலையும், 
நான்கு கைகளுடனும் காணப்படுகிறார். இவரின் மேற்புற இடக்கையில் தாமரை மலரும், கீழ்ப்புற இடக்கையில் புனித வேதத்தையும், மேற்புற வலக்கை 
அபாய முத்திரையையும், கீழ்ப்புற வலக்கை அமுதம் உள்ள பாத்திரத்தையும் கொண்டுள்ளது. 

பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் டாகினி/தாகினி. பளபளக்கும் ரோஜா சிகப்பு வண்ணத்தினையும், 
நான்கு கரத்தினையும் கொண்டவள். மண்டையோடு, வாள், கேடயம், திரிசூலம் ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள். 

மிருகம் : வினாயகர், யானை முகம் கொண்டவர். 

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : சிறுநீரகம், சிறுநீரகப்பை

பீஜமந்திரம் : லங் 

பலன்கள் : குண்டலினி சக்தியை விழிப்புறச் செய்தல், ஸ்திரத்தன்மையையும், உயிர் ஆற்றலையும், அதிகரிக்கச் செய்யும். 
இந்த சக்கரம் தூண்டப்படிருந்தால் உணவு, உறக்கம் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும். 

*******************************************************************************************************
சுவாதிஷ்டானம்

அமைப்பு : ஆறு இதழ்கள் கொண்ட ஆரஞ்சு நிறத்தாமரை ஆகும். இச்சக்கரத்தினின்று ஆறுமுக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின் 
ஆறு இதழ்கள் போல் உருவகப் படுத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு நாடியின் அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "ஸ, ஹ, ம், ய, ர, ல" என்ற 
எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இதன் மையத்தில் வளைந்த சாம்பல் நிறப் பிறைச் சந்திரன் ஒன்றும் குறிக்கப் படுகிறது.

இடம் : பிறப்புறுப்புக்கு மேல். 

மூலக்கூறு : நீர்

ஆண் தெய்வம் : விஷ்ணு, இவர் காப்பவர், கரு நீல நிற மேனியுடன் தங்க நிற வேட்டியும், பச்சை நிற துண்டும் அணிந்து நான்கு கைகளுடனும் காணப்படுகிறார். 
சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறார்.

பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் ராகிணி (அ) சாகிணி. செந்தாமரையில் அமர்ந்து சிகப்பு நிற புடவை அணிந்து 
இரண்டு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். மண்டையோடு, அம்பு, கோடாரி, உடுக்கை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள். 

மிருகம் : பச்சை நிற முதலை, வருணனின் வாகனம். 

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : கர்ப்பப்பை, பிறப்புறுப்புகள், பெருங்குடல் 

பீஜமந்திரம் : வங் 

பலன்கள் : இந்த சக்கரம் மலர்வதால் நமது சுய கட்டுப்பாட்டின் தீவிரம் தூண்டப் பட்டு விழிப்புணர்வு நிலை மிளிரும். நமது எண்ணம், செயல், சிந்தனை சார்ந்த 
விஷயங்களின் மீதான மேம்பட்ட பிடிப்புணர்வுக்கு இந்த சக்கரம் தூண்டப் படுவது அவசியமாகிறது.
**********************************************************************************************************************
மணிபூரகம்

அமைப்பு : பத்து இதழ்கள் கொண்ட பிரகாசமான மஞ்சள் நிறத்தாமரை. நெருப்பு ஜ்வாலையை (ஜட்டராக்னி) மையத்தில் கொண்டது இந்தச் சக்கரம். இந்த சக்கரத்திலிருந்து 
தாமரை இதழ் போன்ற பத்து யோக நாடிகள் கிளம்புகின்றன. இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை டட, ணத, தத, தந, பப என்ற எழுத்துக்களால் குறிப்பிடுகின்றனர். 
மணிப்பூரகத்தின் அதிதேவன் விஷ்ணு, அதிதேவதை லக்குமி/லாகிணி. 

இடம் : தொப்புள் 

மூலக்கூறு : நெருப்பு 

ஆண் தெய்வம் : பிராப்த ருத்திரன், நீல நிற மேனியுடனும், வெள்ளிக் கழுத்துடனும் தங்கப் புலித் தோலில் அமர்ந்து இரு கைகளுடனும் காணப்படுகிறார். சூலம், 
உடுக்கை, மலர் ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறார். 

பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் லாகிணி. மூன்று தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். 
வஜ்ராயுதம்(இடி), காமத்தை தூண்டும் அம்பு, நெருப்பு, முத்திரை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள். 

மிருகம் : ஆண் ஆடு, அக்கினியின் வாகனம். 

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : வயிறு, கல்லீரல், சிறுகுடல், மண்ணீரல் 

பீஜமந்திரம் : ரங் 

பலன்கள் : உடல் சக்தியையும், மிக்க ஆரோக்கியத்தையும் தீவிரப்படுத்தி விழிப்படையச் செய்கிறது. உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கானது. 
இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள். 
******************************************************************************************************************
அனாகதம்

அமைப்பு : பன்னிரெண்டு தாமரை இதழ்கள் கொண்ட பச்சை நிறத்துடன் கூடிய இந்தச் சக்கரத்தின் மையத்தில் அறுகோண வடிவத்தில் பிரகாசமாக ஒளிவீசும் 
பொன்னிற ஜோதியைக் கொண்டது. இந்த அனாகத சக்கரம் இதயத்தோடு தொடர்புடையதாக கூறப் படுகிறது. இந்த சக்கரமானது பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" 
என்னும் எழுத்துகளில் ஒன்றான "சி" என்னும் எழுத்தையும் அதன் தத்துவத்தையும் விளக்குவதாக அமைகின்றது.

இடம் : இந்த ஆதார மையமானது நமது கழுத்திற்கு கீழே இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நடுவில் சுழிமுனை நாடியில் அமைந்திருக்கிறது. 

மூலக்கூறு : காற்று 

ஆண் தெய்வம் : ஈசான ருத்திர சிவன், நீல நிற மேனியுடன் புலித் தோல் அணிந்து இரு கைகளுடனும் காணப்படுகிறார். திரிசூலம், 
தமரு உடுக்கை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறார். தலையில் கங்கை நீர் செறிந்து கொண்டிருக்கிறாள். 

பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் காகினி. ரோஜா வண்ணம் கொண்டவள். சிகப்பு 
நிற தாமரையில் அமர்ந்து வான நீல நிற புடவை அணிந்து நான்கு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். மண்டையோடு, 
வாள், கேடயம், திரிசூலம் ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள். 

மிருகம் : மலையாடு 

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : இதயம் 

பீஜமந்திரம் : யங் 

பலன்கள் : அன்பு, இரக்கம், உணர்வு, இவற்றின் மூலம் உறவுகள் சீராகும். இந்த சக்கரத்துகென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. 
படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது. அருள் நிலை, ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை. மூலாதார 
சக்கரத்தில் இருந்து எழுப்பப் பட்ட குண்டலினியானது அனாகத சக்கரத்தை வந்தடையும் போது அதற்கு “அக்கினி குண்டலினி” 
என்று பெயராகிறது. இப்படி அனாகத சக்கரம் மலர்ந்த நிலையில், சாதகனின் உள்ளத்தில் கருணை, அன்பு, இரக்கம் போன்ற 
சாத்வீக குணங்கள் மேம்படும். படைப்பாற்றலின் ரகசியமும் புரியவரும்.
**************************************************************************************************************************
விசுத்தி

அமைப்பு : பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட, உள்ளே நீல நிறத்தையுடைய அடர் நீலம் கொண்ட சக்கரமாகும். பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் 
எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ்
 போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன. அவற்றின் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ என்ற எழுத்துக்களால் 
 குறிக்கப்படுகின்றன. 

இடம் : தொண்டை, இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது 
குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. 

மூலக்கூறு : ஆகாயம் 

ஆண் தெய்வம் : பஞ்சாட்சர சிவன், நீல நிற மேனியுடன் புலித் தோல் அணிந்து இந்து தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறார். 
திரிசூலம், உடுக்கை, ஜப மாலை, அபாய முத்திரை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறார். 

பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் சாகிணி. இளம் ரோஜா வண்ணம் கொண்டவள். சிகப்பு நிற 
தாமரையில் அமர்ந்து வான நீல நிற புடவை அணிந்து நான்கு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். மண்டையோடு, அங்குசம், புனித வேதம், 
ஜப மாலை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள். 

மிருகம் : சாம்பல் நிற யானை. 

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : தொண்டை, நுரையீரல் 

பீஜமந்திரம் : ஹங் 

பலன்கள் : சரணாகதியை வெளிக்கொணரும். மறைவான ஆத்மசக்தியின் பரிமாணத்தைத் திறக்கச் செய்யும். புனிதத்துவம் வளரும். விசுக்தி 
சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல, தீய உணர்வுகள், 
எண்ணங்கள், சக்திகள் என்று விஷத்தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபட முடியும். இந்த சக்கரம் மலர்வதன் மூலம் தீமையை உருவாக்கும் அல்லது 
விளைவிக்கும் எண்ணங்கள், உணர்வுகள் எல்லாம் சாதகனை விட்டு நீங்கிடும். இதனால் எதனையும் விருப்பு வெறுப்போ அல்லது பற்றுதலோ இல்லாது 
சாட்சி நிலையில் இருந்து கவனிக்க முடியும். நான் என்கிற அகந்தை அழிந்து அன்பும், கருணையும் மிளிர்ந்தவனாகிடுவான் என்கின்றனர்.
***************************************************************************************************************************
ஆக்கினை

அமைப்பு : இரண்டு தாமரை இதழ்கள் கொண்ட கருநீல நிறத்தையும், முறையே இதழின் வலது பக்கம் சூரியனையும், இதழின் இடது பக்கம் சந்திரனையும், நடுவில் நீல 
நிற லிங்கத்தையும் கொண்ட சக்கரமாகும். இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை ஹ, ள என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. 

இடம் : புருவ மத்தியில், இந்த சக்கரம் நமது புருவ மத்திக்கு நேராக மூளையில் அமைந்திருப்பதாக குறிப்பிடப் படுகிறது. இன்னும் சரியாக சொல்வதெனில் 
நமது நெற்றியில் உள்ள பள்ள முடிச்சுக்கு இனையாக இருக்கிறது. இதற்குத் 'திரிகூடம்" என்றும் பெயர். இந்த ஆக்ஞா சக்கரமும் மற்ற சக்கரங்களைப் போல 
சுழுமுனை நாடியில் அமைந்துள்ளது. 

ஆண் தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் (சிவ-சக்தி), வெண்மை நிற லிங்கத்தின் நடுவே வலது பக்கம் பாதி சிவன் நீல நிற மேனியுடன் புலித் தோல் அணிந்தும், இடது 
பக்கம் பாதி சக்தி ரோஜா நிற மேனியுடன் சிகப்பு நிற புடவை அணிந்தும் காணப்படுகின்றனர். சிவன் கையில் திரிசூலமும், சக்தி கையில் தாமரை மலரும் உள்ளன. 

பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் வாகினி. இளம் ரோஜா வண்ணம் கொண்டவள். சிகப்பு நிற தாமரையில் அமர்ந்து 
சிகப்பு நிற புடவை அணிந்து ஆறு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். மண்டையோடு, உடுக்கை, ஜப மாலை, முத்திரை ஆகியவற்றினை கைகளில் 
தாங்கி இருக்கிறாள். வண்ண கற்கள் பதித்த ஆபரணங்களை அணிந்திருக்கிறாள். 

மிருகம் : - 

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : கண்கள், நெற்றியின் கீழ்ப்பகுதி 

பீஜமந்திரம் : (ॐ)ஆ... உ... ம்... 

பலன்கள் : சூரிய சந்திர சக்திகளை ஒன்றுபடுத்தி, இந்த சக்கரத்தின் மீது தொடர்ந்து தியானம் செய்வது, ஞாபக சக்தியை அதிகப்படுத்தும், விழிப்புணர்வை ஒருமுகப்படுத்தும்.
 இது ஞானம், தெளிவு, போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு திகழமுடியுமே தவிர சமூகத்தில் நிறைய 
 எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்கிஞை முழுவதுமாகத் 
 தூண்டப்பட்டவர்கள் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்கிறார்கள். ஆக்ஞா சக்கரம் மலர்வதையே நெற்றி கண் திறப்பதாக பொதுவில் 
 குறிப்பிடுகின்றனர். இத்தகைய மலர்ச்சி நிலையில் சாதகனின் கவனக்குவிப்பு, விழிப்புணர்வு, நினைவாற்றல் போன்றவை பல மடங்கு அதிகரிக்கும். வாழ்வின் ஞானத்தை 
 எல்லாம் தன்னகத்தே ஈர்த்துக் கொண்ட உயரிய நிலை இது.
 *********************************************************************************
 துரியம்

 அமைப்பு : ஆயிரம் தாமரை இதழ்கள், ஊதா நிறத்துடன் அடர் பொன்னிறம் கொண்டது. ஜோதிர் லிங்கத்தை மையத்தில் உடையது. ஆக்ஞா சக்கரத்தில் இருந்து 
 எட்டு விரற்கடை மேலே நமது தலையின் உச்சியில் இந்த சக்தி ஆதார மையம் அமைந்திருக்கிறது. நமது மூளை இதற்கு தொடர்பான உறுப்பாக கூறப்பட்டிருக்கிறது. 
 அதாவது ஆயிரம் யோக நாடிகள் இந்த சக்கரத்தில் இருந்து வெளிக் கிளம்புகின்றன.

இடம் : உச்சந்தலை 

ஆண் தெய்வம் : - 

பெண் தெய்வம் : - 

மிருகம் : - 

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : மூளை 

பீஜமந்திரம் : ஓஹும் சத்யம் ஓம் 

பலன்கள் : இந்தச் சக்கரம் நன்கு மலர்ந்தால், பிரபஞ்ச உணர்வுடன் முழுமையாக ஒன்றுபடுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லும். 
இந்த சக்கரமமானது பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச நிலையிலேயே இருக்கிற தன்மையானது 
சதுரியம் முழுமையாகத் தூண்டப்பட்டவர்களுக்கு உரியது. இவர்களுக்கு உணவு ஊட்டுதல், தூய்மை செய்தல், உடை உடுத்துதல் 
போன்றவற்றை மற்றவர்கள்தான் செய்ய வேண்டும். இதனால் இவர்கள் “அவதூதர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். 

JOTHIDAM KARPOM VANGA